Sunday, August 18, 2019

Sound is Almighty

Sri Aadhi Shiva Guru Vasi yogam

அண்டசராசரமெங்கிலும் நாதத்தின் ஒலி அலைகள் நீக்கமற பரவியிருக்கிறது. நாதமாகிய ஒலியே முதலில் தோன்றியதினால் நாதபிரம்மம் என்று சொல்லக் கேட்கிறோம். அந்த ஒலி அலைகளில் ஒவ்வொரு அலைகளிலும் ஒவ்வொரு ஓசை எழுகிறது. அதையே அக்ஷரங்கள் என்பார்கள். இந்த நாதமே சக்தியாக இருந்து எல்லாவற்றையும் இயக்குகிறது. அந்த அண்டத்தின் பிரதிபலிப்பே இந்தப் பிண்டம். எனவே அண்டத்தில் உள்ள ஒலி அலைகளிலுள்ள ஓசையின் மூலம் இயங்கும் சக்திகள் நம் பிண்டத்தில் உள்ள எல்லாச் சக்கரங்களைச் சுற்றிலும் அமைந்து செயல்படுகின்றன.

இதையே சித்தர்களும், ரிஷிகளும் சக்ரங்களை தாமரை மலராக வடிவமைத்து, அதை சுற்றி உள்ள சக்தி மையங்களை இதழ்களாகவும், அதில் ஒலிக்கும் ஓசையை அக்ஷரங்களைச் சேர்த்து மந்திரங்களாக்கித் தந்தார்கள். அந்த குறிப்பிட்ட அக்ஷரத்தை ஒலித்து ஓசையை இடைவிடாது எழுப்பும் போது, பிண்டத்திலுள்ள அந்த குறிப்பிட்ட சக்தி மையம் தூண்டப் பெற்று குறிப்பிட்ட சக்திகள் விழிப்படைந்து அந்த இயக்கம் வலுவடையும் போது காரிய சித்தி ஏற்படுகிறது. அந்த சக்திக்கு அடையாளம் தருவதற்காக அதற்கு பெயர்களும் வடிவமும் தரப்பட்டன.

உதாரணமாக சிவபெருமானின் மிருத்யுஞ்ஜய மந்திரத்தை எடுத்துக் கொண்டால் அதில் 33 எழுத்துக்கள் உள்ளன. இந்த 33 எழுத்துக்களிலும் உள்ள சக்திகளும் சிவத்தோடு சேர்ந்து நம் உடலில் 33 இடங்களில் நின்று இயங்கி வருவதாக வசிஷ்ட மகரிஷி கூறுகிறார். இந்த மந்திரத்தை ஜபம் செய்யும் போது அந்த சக்திமையங்கள் விழிப்படைந்து பிரபஞ்சத்திலிருந்து அந்த சக்திகளைத் தடையின்றி ஈர்த்து ஜீவனை பலமுள்ளவனாகவும், ஆயுள் உள்ளவனாகவும் ஆக்கி காக்கிறது. மரணத்தை வெல்லும் மந்திரமாக மிருத்யுஞ்ஜய மந்திரம் சொல்லப்படுகிறது. த்ரியம்பகம் என்ற சொல்லுக்கு பல்வேறு கருத்துக்களை நம் முன்னோர்கள் முன் வைக்கிறார்கள். முக்கண் என்பார்கள். அதாவது வலது கண் சூரியன், இடது கண் சந்திரன், நெற்றிக்கண் அக்னி. இதுவே யோகநிலையில் சூரிய கலை, சந்திர கலை, சுழுமுனை அதாவது அக்னி கலை எனப்படுகிறது.

மூன்று சக்திகளையும் (இசஞ்சா சக்தி, க்ரியா சக்தி, ஜ்ஞான சக்தி) உடையவர் என்பதால் த்ரியம்பகன் . சத்துவம், இராஜஸம், தாமஸம் என்ற முக்குணங்களைக் கொண்டு ஜீவனில் நிலைப்பதால் முக்குணங்களை முக்கண்ணாக உடையவர் என்பர் சிலர். வேதாந்தம் சித்தம், அஹங்காரம், புத்தி மூன்றையும் முக்கண்ணாகக் குறிப்பிடுகின்றது. இப்படி பல் வேறு கருத்துக்களையும் கூர்ந்து கவனித்தால், எல்லா கருத்துக்களும் யோக நிலையில் மேன்மையடையும் விஷயங்களைக் குறித்தே சொல்லப்பட்டிருப்பது புரியும். ம்ருத்யு என்றால் அஞ்ஞானம். அஞ்ஞானத்தை நீக்கி சம்சார பந்தத்திலிருந்து ஜீவனை ரட்ஷிக்கும் மந்திரம். இதுவே மரணத்தை வெல்லும் மந்திரம். இந்த மந்திரத்தை இலட்சம் தடவை உச்சாடனம் செய்ய வைத்து யாகம் செய்தால் நூறு வயதைத் தாண்டி வாழலாம் என்றும், சாகக் கிடப்பவர் பிழைத்து விடுவார் என்றும் சிலர் நினைக்கிறார்கள். அது அவ்வாறல்ல. பணம் பறிப்பவர்கள் சொல்லும் கட்டுக் கதை அது. எவர் ஒருவர் தனக்குத் தானே அந்த மந்திரத்தின் பொருள் உணர்ந்து இடைவிடாது மனதில் உச்சரித்துக் கொண்டிருக்கிறாரோ, அவர்தம் சக்தி மையங்கள் விழிப்படைந்து ஆதாரச் சக்கரங்கள் தூய்மை பெற்று, சுழு முனையாகிய மூன்றாவது கண் திறந்து, அதாவது ஞானம் பெற்று பிறப்பில்லாத நிலையை அடைவார். அதாவது மரணத்தை வெல்வார்.

இந்த மந்திரமானது
''த்ர்யம்பகம் யஜாமஹே
ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம் |
உர்வாருக மிவ பந்தனாத்
ம்ருத்யோர் முக்ஷீயமா அம்ருதாத் ||''

பந்தத்தை நீக்கி மரணத்தை வெல்லும் நிலையைத் தரும் மந்திரம். இடைவிடாது இந்த மந்திரத்தை மனதுக்குள் உச்சரித்துக் கொண்டிருப்பவர்களுக்கு குண்டலினியானவள் விழிப்படைந்து ஆறு ஆதாரங்களையும் சுலபமாகக் கடந்து சஹஸ்ராரத்தை அடைவாள். அதற்குத் தோதாக எல்லா சக்தி மையங்களும், ஆறு ஆதாரங்களும் தூய்மையடைந்து சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கும். எனவே ப்ரபஞ்ச சக்தியோடு தொடர்பு ஏற்பட்டு குண்டலினியைத் தாங்கும் வலிமை தேகம் பெற்று விடும். இப்போது இந்த மந்திரத்திலுள்ள எந்தெந்த வார்த்தைகளை உச்சரிக்கும் போது எந்தெந்த சக்கரங்களில் உள்ள சக்திகள் சிறப்பாக இயங்கும் என்பதையும், அந்த சக்திகளோடு கூடிய சிவனின் பெயர்களையும் காண்போம்.

த்ர்யம்பகம் - பூதசக்தி ஸஹித பவேச போதகர் - மூலாதாரச் சக்கரம்.
யஜாமஹே - சர்வாணீ சக்தி ஸஹித சர்வேச போதகர் - சுவாதிஷ்டானம்.
ஸுகந்திம் - விரூபா சக்தி ஸஹித ருத்ரேச போதகர் - மணிபூரகம்.
புஷ்டிவர்த்தனம் - வம்ச வர்த்தினி சக்தி ஸஹித புருஷவரதேச போதகர் - அநாஹதம்.
உருவாருகமிவ - உக்ரா சக்தி ஸஹித உக்ரேச போதகர் - விசுத்தி.
பந்தனாத் - மானவதீ சக்தி ஸஹித மஹாதேவேச போதகர் - ஆக்ஞா.
ம்ருத்யோர்முக்ஷீய - பத்ரகாளி சக்தி ஸஹித பீமேச போதகர் - சகஸ்ராரம்.
மாஅம்ருதாத் - ஈசானி சக்தி ஸஹித ஈசானேச போதகர் - சகஸ்ராரம்.

சக்தியை வளர்த்து ஜீவனை அமிர்தமயாக ஆக்கி முக்தி நிலைக்கு கொண்டு சேர்க்கும் தாரக மந்திரம். இந்த மந்திரங்களை கடவுளே இல்லை என்று சொல்பவர்கள் கூட உச்சரிக்கலாம். பலன் நிச்சயம். பக்தியோடு உச்சரிப்பவர்கள் மனமும் வசப்படுவதால் எளிதில் காரியம் சித்தியாகும். இந்த விளக்கங்களெல்லாம் அறிவைப் பேரறிவு நிலைக்குக் கொண்டு செல்ல முனைபவர்களுக்காகவே சொல்லப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment